அபராத தொகை செலுத்துவதில் இருந்து தப்பிக்க போலி பதிவெண்ணுடன் ‘புல்லட்’டில் வலம் வந்தவர் கைது..!!
பெங்களூருவை சேர்ந்தவர் மரிகவுடா. இவர் புல்லட் வைத்து உள்ளார். இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது உள்பட பல்வேறு வழிகளில் மரிகவுடா போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிகிறது. இதனால் மரிகவுடாவின் புல்லட்டின் மீது ரூ.29 ஆயிரம் வரை அபராதம் இருந்தது. இதையடுத்து அபராத தொகை கட்டுவதை தவிர்க்கும் வகையில் புல்லட்டின் முன்பகுதியில் ஒரு வாகன பதிவெண்ணையும், பின்பகுதியில் இன்னொரு வாகன பதிவெண்ணையும் பொருத்தி கொண்டு மரிகவுடா புல்லட்டை ஓட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் நந்தினி லே-அவுட் போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது மரிகவுடா செய்த மோசடி அம்பலமானது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரது புல்லட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.