நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும் – உத்தவ் தாக்கரேவை எச்சரித்த ஏக்நாத் ஷிண்டே..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை பிளவுபடுத்திய ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க. ஆதரவுடன் முதல் மந்திரியாகி உள்ளார். இதனால் சிவசேனா 2 ஆக உடைந்துள்ளது. ஷிண்டே அணியினர் உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கக் கூடாது என பா.ஜ.க.வை எச்சரித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக உத்தவ் தாக்கரே, ஷிண்டே அணி இடையே மோதல் அதிகரித்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது அணியில் உள்ள சில தலைவர்கள் நேரடியாக உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேவை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், நாசிக் மாவட்டம் மாலேகானில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது: விபத்தில் மரணம் அடைந்த சிவசேனா மூத்த தலைவர் தர்மவீருக்கு (ஆனந்த் திகே) என்ன நடந்தது என எனக்கு தெரியும். இதில் நான் சாட்சி. நான் பேட்டி கொடுக்க ஆரம்பித்தால் பூகம்பம் வெடிக்கும். சிலரை போல நான் ஆண்டுதோறும் விடுமுறைக்கு வெளிநாடு செல்வதில்லை. சிவசேனாவும், அதன் வளர்ச்சியும் மட்டுமே எனது மனதில் உள்ளது. பால்தாக்கரே மருமகள் ஸ்மிதா தாக்கரே, பேரன் நிகார் தாக்கரே எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். எங்களை துரோகிகள் என கூறுகிறீர்கள், முதல்மந்திரி பதவிக்காக பால் தாக்கரேவின் கொள்கையை சமரசம் செய்த உங்களை நாங்கள் எப்படி அழைப்பது?. நீங்கள் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டீர்கள். ஆனால் முதல் மந்திரியாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்தீர்கள். இது துரோகம் இல்லையா? அடுத்த சட்டசபை தேர்தலில் எனது தலைமையிலான சிவசேனா, பா.ஜ.க. கூட்டணி 288 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.