புதிய சவால்களை எதிர்கொண்டு மோடி தலைமையிலான ஆட்சி வலுவாக உள்ளது- மத்திய மந்திரி உறுதி..!!
ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மோடி @ 20 – ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், தெரிவித்துள்ளதாவது: முதலில் முதலமைச்சராக இருந்து பின்னர் பிரதமராக ஆகி உலகிலேயே 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஒரே இந்தியத் தலைவர் நரேந்திர மோடி மட்டுமே. கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்காமல், நேரடியாக பிரதமர் பதவியை ஏற்ற முதலமைச்சர் என்ற அரிதான சாதனையும் மோடிக்குச் சொந்தமானதாகும். கடந்த 2002ல் மோடி குஜராத் முதலமைச்சராக வருவதற்கு முன், அவர் அரசிலோ அல்லது நிர்வாகத்திலோ எந்தப் பதவியையும் வகித்ததில்லை. கடந்த காலங்களில் உள்ளூர் மட்டத்திலோ அல்லது மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. மோடியின் ஆட்சி 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடிப்பதற்கும் அத்தியாவசியமான காரணிகள் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குஜராத்தின் முதலமைச்சராக மோடி பதவியேற்ற போது பூஜ் நகரில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கம்தான் அவருக்கு முதல் சவாலாக இருந்தது. பிரதமர் ஆன பிறகு அவர் எதிர்கொண்டுள்ள சமீபத்திய மிகப் பெரிய சவால் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுநோய். புதிய சவால்களை எதிர்கொண்டு வலுவாக உள்ள ஆட்சி என்பதற்கு மோடி தலைமையிலான ஆட்சியே உதாரணமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.