;
Athirady Tamil News

கிராம அலுவலர் பிரிவு ரீதியாக எரிபொருள் விநியோக ஒழுங்கு! யாழ். மாவட்டச் செயலகம் ஆராய்வு!!

0

யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கிராம அலுவலர் பிரிவுகளை ஒதுக்கி, அதன் ஊடாக எரிபொருள் விநியோகிப்பதன் சாத்தியம் குறித்து மாவட்டச் செயலர் க.மகேசன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.சிவதரனுடன் ஆராய்ந்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.
நாளை முதல் வாகன இறுதி இலக்கங்கள் அடிப்படையில் அல்லாது ’கியூ.ஆர்’ முறையில் மாத்திரமே நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.

அனைவருக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், நேர விரயத்தை தவிர்ப்பதற்கும் யாழ். மாவட்டச் செயலர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றார். அதன் அடிப்படையில் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கமைப்பதன் ஊடாக இவை இரண்டையும் சாத்தியமாக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.

ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் சூழவுள்ள கிராம அலுவலர் பிரிவுகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்துக்குள் அங்கு வசிக்கும் மக்கள் தமது வாகனங்களுக்கான எரிபொருளை குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். அவர்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் வகையில் எரிபொருள் அட்டையை, அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும்.

ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே ஒதுக்கப்படும். தேசிய ரீதியிலான ’கியூ.ஆர்’ நடைமுறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகிக்கப்படும்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் பவுஸர் எப்போது வரும் என்ற விவரத்தை வெளியிடுவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பவுஸர் வந்தடைந்த மறுநாளே குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலையிலிருந்து மாலை வரையில் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியான வரிசையைப் பேணுவது தொடர்பிலும், அத்தியாவசிய சேவையினருக்கு தனியான வரிசையைப் பேணுவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இதுதொடர்பான இறுதி முடிவு நாளை எடுக்கப்படும் என்று தெரியவருகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.