மின்பாதையில் விபத்து- மதுரையில் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்..!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கருவேலம்பட்டியில் ரெயில்வே கேட் கிராசிங் லெவல் உள்ளது.
இன்று காலை 11 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் அந்த பகுதியை கடப்பதற்காக கேட் மூடப்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த ரெயில் கருவேலம்பட்டி கிராசிங்கை கடந்து சென்ற பின் கேட் திறக்கப்பட்டு காத்திருந்த வாகனங்கள் சென்றன.
அப்போது நெல் அறுவடை எந்திரத்தை ஏற்றி வந்த ஒரு லாரி, கேட்டை திறந்தபோது திடீரென மோதியது. இதில் தூக்கப்பட்ட கேட் உயரழுத்த மின் கம்பியில் மோதியது.
இதனால் உடனடியாக மின்தடை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மின் உயர் அழுத்த கம்பியில் மின் சப்ளை கொடுப்பதற்கான பணி 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.
இதன் காரணமாக கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருப்பரங்குன்றத்தில் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
1 மணி நேரத்துக்கு மேலாக ரெயில்கள் செல்ல தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சிலர் ரெயில் நிலையத்திலிருந்து வெளியேறி வேறு வாகனங்களில் சென்றனர்.