தேனி மாவட்டத்தில் தொடரும் கனமழை- வைகை அணை நீர்மட்டம் 67 அடியை எட்டியது..!!
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தபோதும் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து சாரலாக தொடங்கி கன மழை கொட்டியது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நிரம்ப தொடங்கி உள்ளன. பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழ் சென்றது. தற்போது பரவலாக மழை பெய்வதால் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 2890 கன அடி நீர் வருகிறது. 69 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுகிறது. நேற்று 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று காலை 67.03 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. 68 அடியை எட்டும் பொழுது 2வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தொடர் மழையால் கும்பக்கரை, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் வராகநதி, கொட்டக்குடி ஆறு, முல்லைப்பெரியாறு என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது. எனவே பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம், துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.15 அடியாக உள்ளது. 1904 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1611 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.20 அடியாக உள்ளது. 298 கன அடி நீர் வருகிறது. விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 55 அடியை எட்டியவுடன் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். சோத்துப்பாறை அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. 126 அடி உயரம் உள்ள அணையில் தற்போது 113.48 அடி நீர்மட்டம் உள்ளது. 124 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 29.4, தேக்கடி 54.6, கூடலூர் 32.4, உத்தமபாளையம் 23, வீரபாண்டி 54, வைகை அணை 26, மஞ்சளாறு 29, சோத்துப்பாறை 30, ஆண்டிபட்டி 33.2, அரண்மனைபுதூர் 6, போடி 13.4, பெரியகுளம் 81 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.