செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்கிற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண அரங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, போட்டி ஏற்பாட்டாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின் நிறை குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக, உணவு, தங்குமிடங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இதற்கிடையே, பாலஸ்தீனை சேர்ந்த இளம் வீராங்கனை ராண்டாவை சந்தித்த முதல்வர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்ததுடன் நன்றாக விளையாடும்படி கூறினார். ஆய்வின் இறுதியில் நிறைவு விழா குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.