பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தினால் பூரி இலவசம் – சாலையோர வியாபாரியைப் பாராட்டிய பிரதமர் மோடி..!!
பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரான சண்டிகரைச் சேர்ந்தவர் ராணா. உணவுக்கடையை நடத்தி வரும் இவர் கடந்த 15 ஆண்டாக சைக்கிளில் உணவை விற்று வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டபோது தடுப்பூசி செலுத்த அரசு முடிவு எடுத்தது. பலர் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். அப்போது, யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான ஆதாரத்தைக் கொடுக்கின்றனரோ அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என ராணா அறிவித்தார். ராணாவின் மகள் ரிதிமா அவருக்கு இந்த யோசனையை தெரிவித்தார். இதையடுத்து, பலர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வந்தனர். அவர்களுக்கு தான் விற்று வரும் உணவான பூரி மசாலை இலவசமாக வழங்கி வந்தார். இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் வானொலி வாயிலாக மக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பாராட்டினார். தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. இதையடுத்து ராணா மீண்டும் தனது பழைய யோசனையை செயல்படுத்த தொடங்கி உள்ளார். அதன்படி யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான ஆதாரத்தைக் காண்பிக்கின்றனரோ அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவை விற்று வரும் ராணாவின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பிரதமர் மோடி தன்னைக் குறிப்பிட்டு மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டியது தனக்கு பெருமையான விஷயமாக அமைந்தது என்று கூறினார்.