மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள்: தென்மாநிலங்கள் எதிர்க்கும்- காங்கிரஸ் கருத்து..!!
2031-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப்பின் நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும், இது நாட்டுக்கு மிகப்பெரிய அரசியல் சவாலை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மாநிலங்களவை புதிய உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்களிப்பு குறித்து விரிவாக உரையாற்றினார். மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 2026-ம் ஆண்டு வரை மாநிலங்களவை மறுவரையறை செய்யக்கூடாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு சட்ட திருத்தம் நிறைவேற்றியிருந்தது. அதாவது 2026-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்காது. ஆனால் அதன் பின்னர் நடைபெறும் 2031-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப்பின், அதற்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ஆனால் நாட்டுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என நான் கூறுகிறேன். அதாவது தென்னிந்திய மாநிலங்கள், மேற்கு மற்றும் சில வடக்கு மாநிலங்கள் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை செவ்வனே செயல்படுத்தி உள்ளதால் அங்கெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை குறைந்திருக்கும். ஆனால் உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா போன்ற மத்திய மாநிலங்களில் அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து இருக்கும். இது மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கையில் எதிரொலிக்கும். தற்போதைய மத்திய அரசு அரசியல் சாசனத்தை திருத்தலாம். ஆனால் 2026-ம் ஆண்டுக்குப்பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே எம்.பி.க்கள் மறுவரையறையை செய்ய வேண்டும் என தற்போதைய அரசியல் சாசனம் சொல்கிறது. அவ்வாறு செய்யும்போது கேரளா எதிர்க்கும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் எதிர்க்கும். அவற்றில் பா.ஜனதா அரசு இருந்தாலும் இதுதான் நடக்கும். இந்த நடவடிக்கையால் பஞ்சாப் மாநிலமும் பாதிக்கப்படும். குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய அனைத்து மாநிலங்களும் இதை எதிர்க்கும். இதை தென்னிந்திய மாநில முதல்-மந்திரிகள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.