இலங்கை கடற்படையினருக்கு நன்றி கூறியுள்ள தமிழக மீனவர்கள்!! (படங்கள்)
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகு பழுதடைந்தமையால், கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை காப்பாற்றி உணவளித்தமைக்காக இலங்கை கடற்படையினருக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான படகில் 06 மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த வேளை படகின் இயந்திரம் திடீரென பழுதடைந்தமையால் , மீனவர்கள் படகில் தத்தளித்துள்னர்.
அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் அவதானித்து, தமிழக மீனவர்களை தமது கடற்படை படகுக்கு ஏற்றி , மீனவர்களின் படகின் இயந்திரத்தை கடற்படையினர் திருத்த முற்பட்ட வேளை அவர்களால் அது முடியவில்லை.
அதனால் மன்னார் கடற்படை முகாமில் இருந்து படகு இயந்திர திருத்துனர்களை அழைத்து முயற்சித்த போதிலும் , அது பயனளிக்கவில்லை.
அதனை அடுத்து மீனவர்களையும் அவர்களின் படகையும் மன்னார் பகுதிக்கு கொண்டு வந்து , அங்கு மீனவர்களுக்கு உணவளித்த பின்னர் ,இராமேஸ்வரத்தில் உள்ள படகு உரிமையாளருக்கு கடற்படையினர் தகவல் வழங்கினர்.
தகவலின் பிரகாரம் பிறிதொரு விசைப்படகில் படகு உரிமையாளர் உள்ளிட்டவர்கள் சர்வதேச கடற்பரப்புக்கு வருகை தந்ததை அடுத்து , அவர்களிடம் மீனவர்களையும் பழுதடைந்த அவர்களின் படகையும் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
படகின் உரிமையாளர் கடற்படையினருக்கு நன்றி கூறி படகையும் மீனவர்களையும் மீட்டு இராமேஸ்வரம் திரும்பினார்.
இலங்கை கடற்படையினர் தம்மை நெருங்கிய வேளை , தாம் கைது செய்யப்பட்ட போவதாகவே அச்சம் அடைந்தோம். ஆனால் அவர்கள் எம்மை கைது செய்யாமல் எமது உயிரை காப்பாற்றி எமக்கு உணவளித்து, படகையும் எம்மையும் மீள கையளித்தமைக்கு கடற்படையினருக்கு நன்றி தெரிவிப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”