எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிப்பு..!!
பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகமாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து கேள்வி நேரம் எடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் நான்கு பேரின் இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரி அக்கட்சியின் எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பினர். அவையின் மையப் பகுதிக்கு வந்த அவர்கள் குரல் எழுப்பியதை கண்ட சபாநாயகர் இருக்கைகளுக்குச் சென்று அமருமாறும், சபையை நடத்த அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக, பாராளுமன்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றம் சாட்டினார். எனினும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததை அடுத்து அவை முதலில் நண்பகல் 12 மணி வரையும் பின்னர் 2 மணிவரையும் ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது விவகாரத்தை பாராளுமன்ற மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் எழுப்பினர். இந்த விவகாரத்திற்கும், சபைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், உறுப்பினர்கள் இருக்கைகளுக்குச் செல்லுமாறு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, கேட்டுக் கொண்டார். மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று குரல் எழுப்பியதை அடுத்து, நண்பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.