இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதே நாட்டிற்கு அவர்கள் ஆற்றும் சிறந்த பங்களிப்பு – கவர்னர் ஆர்.என்.ரவி..!!
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற, அறியப்படாத வீரர்களின் புகைப்படக் கண்காட்சியை கவர்னர் மாளிகையில், கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சி வரும் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது உயிரை தியாகம் செய்த நிலையில், அதில் சிலரை மட்டுமே நாம் கொண்டாடி வருகிறோம். 75-வது சுதந்திர தினத்தை விடுதலைப் பெருவிழாவாக நாம் கொண்டாடி வரும் வேளையில், ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு இளைஞரும் தம்மை அடையாளம் கண்டு தங்களுக்கான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், தொழில்முனைவராக ஆக வேண்டும். தோல்வி பயம் காரணமாக துணிச்சலான முடிவை எடுப்பதற்கு தயங்கக் கூடாது. வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிதரும் தமது வாழ்க்கை வரலாற்றில் பலமுறை தோற்றவராக இருந்துள்ளனர். நமது தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டு, வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும். இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதே நாட்டிற்கு அவர்கள் ஆற்றும் சிறந்த பங்களிப்பு. நமது சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை நினைவுகொள்வதற்கும், புதிய தலைமுறையினருக்கு இவ்வீரர்கள் குறித்து அறியச் செய்வதற்கும் இந்தப் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 130 சுதந்திரப் போராட்ட வீரர்களின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.