மாதிரி தொழில் வழிகாட்டு மையம்..!!
புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சந்திர பிரியங்கா கூறியுள்ளார். புதுவை தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வழிகாட்டு மையம்
புதுச்சேரி வேலைவாய்ப்பகமானது கடந்த 2016 முதல் மாதிரி தொழில் வழிகாட்டு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் நோக்கமானது வேலை தேடுபவர்களையும், வேலை அளிப்பவர்களையும் ஒருங்கிணைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகும். மேலும் மாணவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும் வழிகாட்டியாகவும் செயல்படுகிறது. இதன் பயனாக புதுவை மாநிலத்தில் கடந்த 2016 முதல் 27 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 3 ஆயிரத்து 159 பேர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக காரைக்காலில் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் அமைப்பதற்கு ரூ.34 லட்சத்து 74 ஆயிரம் மத்திய அரசின் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. மாதிரி தொழில் மையம் அமைப்பதற்கான இடம் காரைக்காலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் நடக்கிறது.
பணிகள் துரிதம்
மேலும் புதுச்சேரி அரசின் கோரிக்கையின் அடிப்படையில் மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் மாதிரி தொழில்வழிகாட்டு மையம் அமைப்பதற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் அரசின் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் ஆரம்பிப்பதற்கான அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில்முறை வழிகாட்டு மையங்களை புதுச்சேரி இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.