பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது..!!
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை ஆகும். தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்வரத்து பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு மாதமாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 100 அடியை தாண்டியது.
101 அடியை எட்டியது
நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.78 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 927 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 6 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது. அப்போது அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 824 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடியும், காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 500 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்து பொதுப்பணித்துறையால் வகுக்கப்பட்ட விதியின் அடிப்படையில் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை 102 அடி வரையிலும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடி வரையிலும் தண்ணிர் தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எந்த நேரத்திலும் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டி விடும் என்பதால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.