குரங்கு அம்மை பரவல்: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை..!!
இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பை கண்ட கேரளாவில் தான் குரங்கு அம்மையும் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி, ஐதராபாத் ஆகிய மாநிலங்களிலும் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு இருந்த 22 வயது வாலிபர் திடீரென உயிரிழந்தார். அவர் குரங்கு அம்மையால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் குரங்கு அம்மை பரவி விடும் என்று மக்கள் மத்தியில் பீதி எழுந்து உள்ளது. இதற்கிடையே பெங்களூருவுக்கு வந்த ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டது. இதனால் கர்நாடகத்திலும் குரங்கு அம்மை பரவி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த ஆப்பிரிக்க நபர் குரங்கு அம்மையால் பாதிக்கப்படவில்லை என்றும், சின்னம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். நாங்கள் குரங்கு அம்மையை தீவிரமாக எடுத்து உள்ளோம். கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுப்பது குறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், சுகாதாரத்துறையினருடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த ஆலோசனையின் போது வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்வது, ஆய்வகங்கள் அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குரங்கு அம்மையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள், மருந்துகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.