யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ்ந்து நிற்போருக்கு எதிராக நடவடிக்கை!!
வாகனங்களை வரிசையில் விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சூழ அதிகளவானோர் நிற்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மாவட்ட செயலரின் தலைமையில் பிரதேச செயலர்கள், இ.போ.ச. வடபிராந்திய முகாமையாளர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், பொலிஸார் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதன் போது , தற்போது ’கியூஆர்’ நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை ஒரு வாரத்துக்கு அவதானித்து அதன் பின்னர் கிராம அலுவலர் பிரிவு ரீதியான எரிபொருள் விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதை ஆராயலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் விமான நிலையம் செல்வோர் கொழும்புக்கு செல்லும் வாகனங்களுக்கு பிரதேச செயலரின் பரிந்துரையுடன் இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போ) எரிபொருள் நிரப்ப முடியும்.
அந்த வாகனத்துக்கு ’கியூஆர்’ நடைமுறைக்கு அமைவாக 40 லீற்றர் டீசல் பெற முடியும் என்பதால், போக்குவரத்துச் சபை எஞ்சிய 60 லீற்றர் டீசலையே விநியோகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மரக்கறிகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் இவ்வாறு டீசல் விநியோகிக்க இலங்கை போக்குவரத்துச் சபை இணங்கியுள்ளது.
அத்துடன் பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள், தனியார் பேருந்துகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வாகனங்கள், இலங்கை மின்சார சபையின் வாகனங்கள், ரெலிக்கொம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சாலையில் வழங்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களை மாலை 5 மணியுடன் மூடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டபோதும் அதிலுள்ள சில சிக்கல்கள் காரணமாக அந்த முடிவை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தமது பகுதிக்குரிய பிரதேச செயலர்களுடன் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எவ்வளவு வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் நடைபெறும் என்பதை முற்கூட்டியே அறிவித்து, அதற்கு மேலதிகமாக வாகனங்களை அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனங்களை வரிசையில் விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சூழ அதிகளவானோர் நிற்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றுபவர்களின் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”