கர்நாடகத்தில் மீட்பு-நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்; கலெக்டர்களுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு..!!
கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு-நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கனமழை கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்து இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் பெங்களூரு, கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பெங்களூருவில் இருந்தபடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் வந்திதா சர்மா, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என்.பிரசாத், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், அந்த மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் பகுதியில் சேதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண பணிகள் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் அவசரமாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிவாரண உதவிகளை வழங்குவதில் காலதாமதம் செய்யக்கூடாது. தற்காலிக நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும். மைசூரு, உடுப்பி, தாவணகெரே உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். சேதம் அடைந்த மீனவர்களின் படகுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார். மழைக்கு இதுவரை 39 பேர் பலி கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இதுவரை பெய்த மழையால் 3,499 எக்டேர் நிலப்பரப்பில் விவசாய பயிர்களும், 2 ஆயிரத்து 57 எக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. 2 ஆயிரத்து 430 வீடுகள் முழுமையாகவும், 4 ஆயிரத்து 378 வீடுகள் பாதியும் சேதம் அடைந்துள்ளன. மழைக்கு இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 99 கால்நடைகள் செத்துள்ளன. 1,730 கிலோ மீட்டர் நீளத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள், 5 ஆயிரத்து 419 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிராமப்புற சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 629 பாலங்கள், 3 ஆயிரத்து 264 பள்ளி கட்டிடங்கள், 29 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் சேதம் அடைந்தன. 11 ஆயிரத்து 796 மின் கம்பங்கள், 759 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகியுள்ளன. மேற்கண்ட தகவலை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.