எளிமையாக முறையில் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !!
9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வைபவரீதியாக இன்று (03) எளிமையாக ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்வில் முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறுகின்ற போதிலும், மாரியாதை வேட்டுக்கள் தீர்த்தல், வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது.
இந்நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வுகளில் நேற்று(02) முப்படையினர் மற்றும் பொலிஸார், கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.
எனினும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக பாராளுமன்ற முன்றலில் முப்படையினரும் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதையளிக்கவுள்ளனர். இதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என்பதுடன், தேசியக் கொடி மாத்திரம் ஏற்றிவைக்கப்படும்.
இன்று (03) காலை 09.30 மணிக்கு விசேட விருந்தினர்களின் வருகை இடம்பெறவிருப்பதுடன், இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் வருகை தர உள்ளனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையும், அதன் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகையும் இடம்பெற உள்ளது.
இம்முறை ஜனாதிபதியின் ஆசனத்தில் ஜனாதிபதியுடைய இலட்சினைக்கு பதிலாக அரசாங்கத்தின் இலட்சினை பொருத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும். சபை ஒத்திவைக்கப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.