ஜனாதிபதி ரணிலுக்கு அவசர கடிதம்
வலிமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உளப்பூர்வமாக செயலாற்றுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் மூன்று தசாப்தமாக நீங்கள் கண்ட பெருங்கனவு பேரதிஸ்ரமாக நிறைவேறியுள்ளது.
ஆகவே இலக்கை எட்டுவதற்கு அதிகாரம் கிடைத்துள்ளதால் இலகுவாக இருக்கும் என நம்புகிறோம்.என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
முதலில் பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்தி சாமானியனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி கோலுங்கள். அதுவே இன்றைய அத்தியாவசிய அடிப்படை தேவை .குறிப்பிட்ட காலத்துக்குள் உலக ஒழுங்கு நடப்பியலுக்கமைய பொருளாதார நிலையியலை சீர்படுத்துவீர்கள் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஏற்றுமதி செய்யக்கூடிய உள்நாட்டு உற்பத்தியை அதிகம் ஊக்குவியுங்கள் ,போர்க்கால அடிப்படையில் அதனால்தான் அன்னிய செலவாணியை ஈட்ட முடியும்.
எனவே கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்ற முறைமையை (சிஸ்ரம்) உருவாக்கவில்லை.
தூய அரசியலை மேற்கொள்ளாமல் சாக்கடை அரசியலை மேற்கொண்டு நாட்டை அழிவுப் பாதையில் இட்டு செல்லப்பட்டுள்ளது.
காரணம் பல்லினத்தன்மை அற்ற பௌத்த தேசியவாத மேட்டிமையை போக்கை முதன்மைப்படுத்தியதன் விளைவே இந்த நிலைமைக்கு அடிப்படைக் காரணம்.
ஆகவே பௌத்த தேசியவாதமும், யுத்த வெற்றிவாதமும், இராணுவ மேட்டிமைத்தனமும் தோற்றுவிட்டது என்பதை இனியாவது உணருங்கள் .
சிங்கள கடும் போக்காளர்களுக்கு உணர்த்துங்கள். புத்தரின் தம்மபதக் கோட்பாட்டை இனியாவது நடைமுறைப்படுத்த முனையுங்கள். நாட்டுக்கு நாடு கடன் பெற்று இலங்கை பொருளாதாரத்தை நிலை நிறுத்த முடியாது என்பதை இதுவரை உணர்ந்ததாக தெரியவில்லை.
இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரை இலங்கைத் தீர்வு சுபிட்சமாக முன்னோக்கி நகர்தல் என்பது வெறும் பகட்டு பகல் கனவு. அது உதட்டளவு டன் உரு மறைந்து போகும் என்பதை தாங்கள் உணராதவர் அல்ல. ஆகவே இடைக்கால தீர்வையாவது முன்வையுங்கள். புலம்பெயர்ந்த இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பெரும் பங்காற்றுபவர்கள்.
தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமை வழங்க வேண்டும். என்பதிலும் அதிகாரப் பகிர்வு மூலமே இன முரண்பாட்டிற்கு முற்றுப்புள்ளி இட முடியும் என பல சந்தர்ப்பங்களில் தாங்கள் வெளிநாட்டு ராஜ தந்திரிகளுக்கும் தமிழ்த் தலமைகளுக்கும் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
2002 உடன்படிக்கை இதற்கு சிறந்த உதாரணம்.
வரலாறு தங்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி வரலாறாக வாழ்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பல முடிவுகளை துணிகரமாக தேர்தல் அரசியல் கடந்து எடுக்க வேண்டும். வருமானம் வரக்கூடிய அரச திணைக்களங்கள் பல ஊழலில் மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றை உடனடியாக மீட்டெடுங்கள். காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வருபவர்கள் நாட்டைப்பற்றி தேசாபிமான விசுவாசமின்றி வினைத்திறனற்ற அரசு நிறுவனங்களை உருவாக்கி வகை தொகையின்றி அரச ஊழியர்களை நியமனம் செய்துள்ளீர்கள்.
இந்த நாட்டிற்கு பெரும் சுமை அரச ஊழியர்களே! அதிகமானவர்கள் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் எந்த பங்களிப்பும் இல்லை வினைத்திறன் அற்றவர்கள் பட்டதாரியானால் அரச நியமனம் வழங்க வேண்டும் என்பது மிகத் தவறான கொள்கையாகும். தங்களின் 2003ம் ஆண்டு ஆட்சியில் கொண்டுவந்தது போல் சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்து அரச ஊழியர்களை அரைவாசியாக குறையுங்கள் யுத்தம் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட முப்படையினர் எதற்கு நாட்டின் பொருளாதார இழப்பில் பெரும் பங்கு இராணுவ செலவீனமே. இனம் கடந்து தேசமாக சிந்தியுங்கள்.
சனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் இவர்களின் உச்சபட்ச வேதனத்தையும் சிறப்பு சலுகைகளையும் சாதராண வாழ்க்கைக்கு ஏற்றது போல குறையுங்கள். பாராளுமன்றம் கூடும் நேரகாலத்தை குறையுங்கள் அர்த்தமில்லாத பயனற்ற விவாதங்களே அதிகம் நடக்கின்றது. கால நீடிப்பு செய்யப்பட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் உடனடியாக கலையுங்கள் மாதாந்தம் பாரிய செலவு ஏற்படுகிறது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை எந்த வித அரசியலும் இன்றி சுயாதீனமாக செயற்பட அனுமதியுங்கள் சாதாரணமாக அரசியலுக்கு வந்து கோடிஸ்வரராக மாறிய அனைத்து அரசியல்வாதிகளின் சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்.
வினைத்திறனின்றி இருக்கும் அரச அதிகாரிகளை உடனடியாக மாற்றுங்கள் ஓய்வு பெறும் வயதை அறுபதாக குறையுங்கள் இல்லாவிட்டால் அரச திணைக்களங்கள் முதியோர் இல்லங்களாக மாறிவிடும். நிலையாக நின்று நிலைக்கக் கூடிய ஒற்றையாட்சி அல்லாத புதிய அரசியல் அமைப்பை உருவாக்குங்கள.; கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்யுங்கள் அல்லது மாற்றுவழி தேடுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைந்து தீர்வு காணுங்கள் உண்மையை கண்டறிந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்.
தொல்பொருள் திணைக்களம், வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, கனியவளத்திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக நில அதிகரிப்பை நிறுத்த வேண்டும், அபகரித்த நிலத்தை உடனடியாக விவசாய உற்பத்திக்காக விடுவிக்க வேண்டும். வடகிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டதத்தை நீக்க வேண்டும். வடகிழக்கில் உள்ள இரானுவம் குறைக்கப்பட வேண்டும்.
ஆகவே இணைந்து முன் நோக்கி நகர்தலுக்கு தங்களின் நல்லெண்ண தாராளாத செயற்பாடே இன ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் என்பதை கடந்த கால பட்டறிவுடன் தெரிவித்து கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.