மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் படேல் பதவி ஏற்பு..!!
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில், ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரும், 2 ஊழல் கண்காணிப்பு ஆணையர்களும் பதவி வகித்து வருகிறார்கள். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சஞ்சய் கோத்தாரி கடந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதி ஓய்வு பெற்றார். அதையடுத்து, ஓராண்டுக்கு மேலாக அப்பதவி காலியாக இருந்தது.புதிய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவின் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அதில், தற்போதைய ஊழல் கண்காணிப்பு ஆணையர் சுரேஷ் படேலை அப்பதவிக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சுரேஷ் படேல் நேற்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் அவர் பொறுப்பேற்றார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுரேஷ் என்.படேல், ஆந்திர வங்கியின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தவர். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இடைக்கால மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக செயல்பட்டு வந்தார்.