;
Athirady Tamil News

பொலிஸாரின் எச்சரிக்கையும் மீறி தொடரவுள்ள போராட்டம் – கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம்!!

0

காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் நாளை மாலை 5 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று அறிவித்தது.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள அரசாங்க அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி கட்டுமானம் மற்றும் பயிர்ச்செய்கைகளை உடனடியாக அகற்றுமாறு போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்தனர்.

எப்படியிருப்பினும், போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு அங்கு தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் நிமேஷ் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டாலும் ஜனநாயக விரோத வேலைத்திட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை என சமூக ஆர்வலர் சானக பண்டார தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது காலி முகத்திடலில் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடாரங்களுடன் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

நாளைய தினத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறவில்லை என்றால், பலவந்தமாக அவர்களை வெளியேற்ற படையினர் களமிறக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தினரால் அடாத்தாக வெளியேற்றியிருந்தனர். இதன்போது வன்முறை சம்பவங்கள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.