ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையேல் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் – இலங்கை ஆசிரியர் சங்கம்!!
ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக ஒடுக்குமுறைகள் மேலோங்கி இருக்கின்ற இலங்கையிலே போராட்டம் உச்சம் பெற்று மக்கள் தங்களுடைய அபிலாசைகளை சரியான பாதையிலே கொண்டு செல்ல வேண்டும் என்று ஆட்சியாளரை நோக்கி செய்த போராட்டங்களில் முன்னின்று உழைத்தவர்களை தொடர்ச்சியாக கைது செய்து தற்போது ஆட்சிபீடத்தில் ஏறி இருக்கின்ற ரனில் விக்ரமசிங்க ராஜபக்ஷ அரசாங்கம், போராட்டக்காரர்களை ஒடுக்கி பதவி மோகத்திற்காக அவசர காலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி ஒவ்வொரு ஜனநாயகவாதிகளையும் கைது செய்து அச்சுறுத்துகின்ற செயற்பாடுகளை செய்கின்றது.
உண்மையில் ஜோசப் ஸ்டாலின் கைது என்பது அப்பட்டமான அராஜகமான அரச பயங்கரவாதத்தை காட்டிநிற்கின்றது. காரணம் காலி முகத்திடல் போராட்டத்தின் 50-வது நாள் நிறைவில் அவர் பங்குபற்றியதாக குறிப்பிட்டு நீதிமன்றத்தால் அவருக்கு சில பாதைகள் ஊடாக செல்ல முடியாதென்று உத்தரவு இருப்பதாகவும் அதாவது செரண்டிப் சுற்று வட்டத்தில் பிரயாணம் செய்தார்கள் என்ற காரணத்தை கூறியும் தங்கள் பதவிக்காக இந்த போராட்டத்தை அகற்றலாம் என்ற வகையில் மூத்த தொழிற்சங்க வாதியாகவும் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து செயற்பட்டு வந்த யோசப் ஸ்டாலின் கைது மூலம் இந்த நாட்டை அச்சுறுத்தலாம் என்று எண்ணத்தில் அரசாங்கம் செயற்பட்டுள்ளது.
செரண்டிப் சுற்று வட்டத்தின் ஊடாகவே ஜோசப் ஸ்டாலின் அவரது வீட்டுக்கு செல்லக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. மாற்று பாதைகள் எதுவும் இல்லை. அன்றாடம் வீட்டுக்கு செல்ல கூடியவொரு நிகழ்வை வைத்துக்கொண்டு யோசப் ஸ்டாலினை பழிவாங்கி போராட்டத்தை அடக்க நினைக்கிற ஆட்சியாளர்கள் இதனை ஒரு துருப்புச் சீட்டாக எடுத்து இதன் மூலமாக நாட்டை அச்சுறுத்தலாம் என நினைக்கின்றார்கள்.
ஜோசப் ஸ்டாலின் கைதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று நாடளாவியரீதியில் முதற்கட்ட நடவடிக்கையாக பாடசாலை முன்பாக இடைவேளை நேரத்தில் ஒன்றுகூடி கவனயீர்ப்பை மேற்கொண்டோம்.ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இதனுடைய தார்ப்பரியத்தை அரசாங்கம் மிக விரைவில் விளங்கிக் கொள்ளும் என்ற செய்தியை சொல்லி வைக்க விரும்புகிறோம் என்றார்.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் த.சிவரூபன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவின்றி கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். அவரொரு ஜனநாயக போராளி. தொழிற்சங்கவாதி இன ஐக்கியத்தை கட்டியெழுப்பும் ஒரு செயற்பாட்டாளர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர் எந்த வன்முறையும் செய்யவில்லை. போராட்டங்களையே முன்னெடுத்திருந்தார். இலங்கையை எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடியான சூழலில் அதற்கு நியாயம் கேட்டு தொடர்ச்சியாக போராடி வருகின்ற மக்களுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் இன்றைய அரசாங்கமானது பெரிய அச்சுறுத்தலை விடுக்கின்றது – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”