;
Athirady Tamil News

ஆராய்ச்சி-வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தொழில்துறையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள்..!!

0

ஆராய்ச்சி-வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தொழில்துறையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற சங்கல்ப் சித்தி நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

பொருளாதார இலக்கு
நாடு 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு உறுதியான ஆட்சியை வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்னிய நேரடி முதலீடு மிக அதிகமாக நமது நாட்டிற்கு வந்துள்ளன. இனி யாரும் இந்தியாவை மென்மையாக எடுத்து கொள்ள மாட்டார்கள். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை அங்கீகரிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்தியா முன்மாதிரியாக ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளது.

மத்திய அரசு காப்பாற்றியது
நிதி உதவி தொகுப்பு திட்டங்களை அறிவிப்பது மற்றும் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை தவிர்த்துவிட்டு பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டு இருந்த மக்களுக்கு உதவ உள்நாட்டு கொரோனா தடுப்பூசிகளை ஊக்கப்படுத்தினோம். கொரோனா நெருக்கடியில் இருந்து, இந்தியாவின் பொருளாதாரம் தான் முதலாவதாக மீண்டுள்ளதாக உலக பொருளாதார நிபுணர்கள் கூறினர்.
ரூ.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கி சிறு-குறு தொழில்களை மத்திய அரசு காப்பாற்றியது. பயனாளிகளுக்கு நேரடியாக மானியத்தை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க தொடங்கினோம். இதன் மூலம் அரசு தங்களை காப்பாற்றியதாக மக்கள் உணர்ந்தனர்.

கொரோனா நெருக்கடி
கொரோனாவை கையாள பொருளாதாரம், உள்கட்டமைப்பு, முறையான சீர்திருத்தம், மக்கள்தொகை, தேவை மற்றும் வினியோகம் ஆகிய 5 அம்சங்களில் நாங்கள் கவனம் செலுத்தினோம். 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா கொரோனா நெருக்கடியில் இருந்து எளிதாக விடுபட முடியாது என்று நினைத்தனர். பெரிய பொருளாதார பலம் கொண்ட நாடுகளே கொரோனாவை கையாள்வதில் தோல்வி அடைந்தன. ஆனால் இந்தியா அதை வெற்றிகரமாக கையாண்டது. வாகன, வாகன உதிரி பாகங்கள் உள்பட 14 உற்பத்தி தொடர்புடன் கூடிய ஊக்கம் அளிக்கும் துறைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த துறைகள் தனியாக செயலாற்ற கூடாது என்ற நிலையை ஏற்படுத்துகிறோம்.

சுகாதார காப்பீடு
விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் வழங்குகிறோம். 2.57 கோடி பேருக்கு வீடுகள், 5 கோடி பேருக்கு சுகாதார காப்பீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். 43 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. 300 வகையான திட்டங்கள் மூலம் ஏழை மக்களுக்கு 23 லட்சம் கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை வறண்ட நிலைக்கு கொண்டு செல்லவில்லை. ஆனால் நாங்கள் அதற்கு மனித முகத்தை கொடுத்துள்ளோம். ஆராய்ச்சி, வளர்ச்சிக்கு தொழில்துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முதலீடு பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் குழு அடிப்படையில் அந்த பணியை மேற்கொள்ளலாம். உலகில் இந்தியர்களுக்கு திறமை மிக்க மூளை உள்ளது. தொழில்துறையினர் புத்தொழில்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவை ஒன்றோடு ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாக உள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.