கடலோர, மலைநாடு மாவட்டங்களில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!
தட்சிண கன்னடா மற்றும் குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையில் மண் சரிவு மற்றும் வீடுகளுக்கு வெள்ளம் புகுந்தது. குடகில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
50 இடங்களில் கன மழை
கர்நாடகத்தில் கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியது. முதலில் தொடர்ந்து பெய்த கனமழை பின்னர் சற்று ஓய்ந்து காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன் ஆகிய பகுதிகளில் பேய் மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 50 இடங்களில் இந்த கன மழை பெய்ததாக கூறப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு
இந்த கனமழையால் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பியில் உள்ள பெரும்பாலான இடங்களில் வீடுகளை வெள்ளம் நீர் சூழ்ந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்தனர். ஏற்கனவே தட்சிண கன்னடாவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தில் 4 பேரும், அக்காள்-தங்கையும் என மொத்தம் 6 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் நேற்றும் சில இடங்களில் வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இதேபோல சில இடங்களில் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் விரிசல் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் சேறு, சகதியுமாக காட்சி அளித்தது. இந்நிலையில் நேற்று சுள்ளியாவில் அரசு பஸ் ஒன்று சேற்றில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பஸ் மீட்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக சுள்ளியா தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதுபோல் உத்தர கன்னடா மாவட்டத்தில் பட்கல், எல்லாபுரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. அதிகளவில் நீர்வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. மேலும் சில இடங்களில் விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததில் பயிர்கள் அழுகி நாசமானது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி போய் உள்ளது.
குடகில் 3 இடங்களில் நிலச்சரிவு
இதேபோல மலைநாடு மாவட்டமான குடகில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதிகப்படியாக செம்பு கிராமத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து சோமாவார்ேபட்டையில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக பாகமண்டலா, கரிகே, செம்பு பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் முழுவதும் மணல் குவிந்தது. இதனால் சாலைகளில் வானங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பொக்லைன் உதவியுடன் சாலையில் கிடந்த மண், கற்கள், மரம், செடி கொடிகளை அகற்றினர். மடிகேரி தாலுகா செம்புவில் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் வீடுகளில் இருந்த உடைமைகள் அனைத்து நாசமானது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.