சர்வதேசமே விசாரணை நடத்த வேண்டும் – தமிழினி மாலவன்!!
சிங்கள இனவழிப்பு ஒற்றையாட்சி அரசுடன் பேச்சை நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியார் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு குற்றங்கள் மனித இனத்துக்கெதிரான குற்றங்களுக்கு
காரணமானவர்களோடு பேச்சை நடத்தியமை சிறிலங்கா ஒற்றை ஆட்சி அரசை பலப்படுத்தி, கூட்டமைப்பின் கதிரை அரசியலுக்கு வெள்ளை அடிக்கும் செயலாகவே நாம் பாக்கின்றோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, இனப்படுகொலை என்பன தொடர்பில் சர்வதேசமே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழரின் கோரிக்கையாகும். இவை தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சை நடத்துவற்கான ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழர் ஒருபோதும் வழங்கவில்லை.
இலங்கை அரசு உள்ளுர் பொறிமுறையின் மூலமாகத் தீர்வு காணப்படும் என தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடன் பேச்சுக்களை நடத்தியமை சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை அரசை பிணை எடுக்கும் சதி முயற்சியாக நாம் பாக்கின்றோம் .சர்வதேச விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள சிங்கள இனவழிப்பு அரசு ஒவ்வொரு ஐ.நா அமர்வையும் சமாளிக்க கூட்டமைப்பின் கதிரை அரசியலை சந்தர்ப்பமாக பயன்படுத்தி வருகின்றது.
கடந்தகாலத்தில் தைப்பொங்கல், தீபாவளி புதுவருடம் ஒவ்வொன்றின்போதும் நம்பிக்கைகள் எல்லாம் காற்றோடு பறந்த அனுபங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாடமாகப் படித்திருப்பதாகத் தெரியவில்லை.
இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஒரு போதும் கொலையாழிகள் தீர்வைத் தரப்போவதில்லை. மீண்டும் மீண்டும் அதில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவது சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பைக் கொண்டு செல்வதற்கே வழிவகுக்கும்.
அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பரவலாக்கல் என்பன தொடர்பாக சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவது கூட்டமைப்பின் ஆயுள் கால அரசியலாகும் ஆனால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மற்றும் இன அழிப்பு என்பவற்றுக்கு இந்த சிறீலங்கா அரசாங்கமே காரணமாக இருந்துள்ளது.
இனவழிப்பில் ஈடுபட்ட குற்றவாழிகளிடம் தீர்வை எதிர்பார்ப்பதோ அதற்கான பேச்சுக்களை நடத்துவதோ இனவழிப்பு கூற்றவாழிகளை நீதிபதிகளாக்கும் செயலாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் சிறீலங்கா அரசின் நோக்கங்களுக்கு கூட்டமைப்பு துணைபோவதாக மட்டுமே அமைந்திருக்க முடியும் என்பதை நாம் தொடர்ந்து பகிரங்கப்படுத்தி வந்திருக்கின்றோம்.
இந்த பின்னணியில் இலங்கை இன அழிப்பு அரச தலைவருடன் பேச்சுக்களை நடத்தியதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆயுள் கால அரசியலை தக்கவைக்கும் முயச்சியாக இது இருக்கும் என நம்புகின்றோம்.
ஈழத்தமிழர் முன்வைத்த சர்வதேச விசாரணை கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்யும் சிறீலங்கா அரசின் உபாயங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் துணைபோய்யுள்ளது என்பதை நாம் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இந்த நிலையில் நாம் பரந்து பட்ட போராட்ட வெளிகளை உருவாக்க வேண்டும் அதன் ஊடாகவே சர்வதேச விசாரணையை நிலை நாட்ட முடியும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”