பெங்களூரு ரெயில் நிலையத்தில் ரூ.112 கோடி ஹெராயினுடன் தமிழக வாலிபர் கைது..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் ரெயிலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பெங்களூரு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த ரெயிலில் சந்தேகப்படும்படி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 2 டிராலி பைகளில் 16 கிலோ எடையுள்ள ஹெராயின் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் எத்தியோப்பாவிலிருந்து பெங்களூருக்கு விமான மூலம் போதைப் பொருளை கடத்தி வந்துள்ளார். எத்தியோப்பியன் விமானத்தில் பெங்களூரு வந்த அவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களுக்கு தெரியாமல் இந்த போதைப் பொருட்களை அவர் கடத்திக் கொண்டு வந்துள்ளார். வியாபாரம் தொடர்பான விசாவில் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு சென்றிருந்த அவர் ஊருக்கு வருவதற்காக விமானத்தில் நாடு திரும்பினார். டெல்லி சென்று அந்த போதைப்பொருட்களை ஒப்படைக்க இருந்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார். இந்த போதைப்பொருட்களை கொடுத்து அனுப்பிய கும்பல் யார்? இதற்காக எவ்வளவு பணம் கைமாறியது என்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூரு ரெயில் நிலையத்தில் ரூ.112 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியிருப்பது இதுவே முதன்முறை என அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான வாலிபர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ரெயில் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.