விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம்; வருவாய்த்துறை அதிகாரி கைது..!!
மைசூரு டவுன் காயத்ரிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் பூர்விக சொத்துகள் உள்ளது. அந்த சொத்துகளை தன் பெயரில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக அவர், மைசூரு மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை பிரிவில் விண்ணப்பத்திருந்தார். இந்த விண்ணப்பத்தை ஏற்ற வருவாய்த்துறை அதிகாரி சித்தராஜு என்பவர், நிலப்பட்டா வழங்கவேண்டும் என்றால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், ஊழல் தடு்ப்புப்படை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுகொண்ட ஊழல் தடுப்புப்படை போலீசார், மகேசிடம் ரசாயண பொடி தடவிய ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்து அதனை சித்தராஜுவிடம் கொடுக்குமாறு சில அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி மகேஷ், மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று சித்தராஜுவிடம் ரூ.15 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை சித்தராஜுவும் வாங்கி கொண்டார். அப்போது அங்கு மறைந்து நின்ற ஊழல் தடுப்புப்படை போலீசார், சித்தராஜுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். கைதான அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மைசூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.