உணவுப் பொதி, தேனீர் விலையில் மாற்றம்!!
சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்புடன், உணவுப் பொதி மற்றும் தேனீர் கோப்பை ஒன்றின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பேலியகொடை மத்திய வர்த்தக நிலையத்தின் மரக்கறிகள், பழங்கள் மற்றும் மீன்களின் விலைகள் கடந்த நாட்களை விட இன்று (06) அதிகரித்துள்ளதாக விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மரக்கறிகளை கொண்டு செல்வதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமம் மற்றும் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் கடந்த தினங்களை விட இன்று பேலியகொட மெனிங் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு சிறிதளவு குறைந்துள்ளதாலும், தொடர்ச்சியாக பொருட்கள் மொத்தமாக கிடைப்பதாலும் நேற்று கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி மொத்த விற்பனை நிலையங்களில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், பருப்பு போன்றவற்றின் விலைகள் சிறிதளவு குறைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதற்கிடையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு மீன் வரத்து குறைந்துள்ளதுடன், இதன் காரணமாக மீன்களின் விலையும் மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (08) நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 200 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு 2022 ஜூன் மாதத்தில் காணப்பட்டதில் இருந்து ஜூலை மாதத்தில் 2.1% ஆல் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் மாதத்தில் 1,854 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டு சொத்து கையிருப்பு ஜூலையில் 1,815 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.