சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரே கிராமத்தில் 50 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலி..!!
சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 50 பேர் இறந்த சம்பவம் அக்கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அங்குள்ள சுஷ்மா மாவட்டத்தில் ரெக்டாகட்டா என்ற கிராமம் உள்ளது. தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 800 பேர் வசித்து வருகின்றனர். எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லாமல் உள்ள இந்த கிராமத்தை கடந்த 2 ஆண்டுகளாக மர்ம காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும், மேலும் காய்ச்சலுடன் குமட்டலும் உண்டாகும். இப்படி அறிகுறி உள்ளவர்களுக்கு எந்த சிகிச்சை அளித்தாலும் பலன் அளிப்பது இல்லை. அவர்கள் மரணம் அடைந்து விடுகிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 50 பேர் மர்ம நோய் தாக்கி இறந்து விட்டனர். 6 மாதங்களில் மொத்தம் 61 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். மேலும் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது எந்த வகையான நோய் என்பது தெரியாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். உயிர் பயத்தில் அவர்கள் நாட்களை கடத்தி வருகிறார்கள். இதையடுத்து ரெக்டாகட்டா கிராமம் மற்றும் அதனை சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து மண் மற்றும் குடிநீரை அதிகாரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். அதன் அடிப்படையில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சத்தீஷ்கர் மாநிலத்தில் பருவமழை தொடங்கும் சமயத்தில் மர்ம நோய் பரவி வருவது மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.