கொட்டும் மழையில் நடுக்காட்டில் தவித்த 3 கர்ப்பிணி பெண்களை மீட்ட அதிகாரிகள்..!!
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையால் கேரளாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் இடுக்கி அணை, அருவிக்கரை, மலம்புழா உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஒரு சில அடிகளே உள்ளதால் அணை கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இதுபோல சுமார் 22 அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழை வெள்ளம் காரணமாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் வெள்ளம் கரையை தாண்டி சாலைகளிலும் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபோல தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். மழை, வெள்ளம் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 36 வீடுகள் முழுமையாகவும், 282 வீடுகள் பகுதி அளவிலும் இடிந்துள்ளது.
மழையால் வீடுகளை இழந்தவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 342 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 12 ஆயிரத்து 195 பேர் தங்கியுள்ளனர்.
மேலும் மலைகிராமங்களில் தவிப்பவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வருகிறார்கள். இதற்காக 11 பேரிடர் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.
நேற்று சாலக்குடியில் உள்ள காட்டுக்குள் 3 கர்ப்பிணி பெண்கள் தவித்து கொண்டிருப்பதாக பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் வந்தது.
அவர்கள் நள்ளிரவு நேரத்திலும் அங்கு சென்று வனத்துறையினர் உதவியுடன் 3 பெண்களையும் மீட்டு வந்தனர்.
கர்ப்பிணி பெண்களை மீட்டு வந்த குழுவினரை வருவாய் துறை மந்திரி பாராட்டினார். மலம்புழா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.