டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது..!!
டெல்லியில் இன்று நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் தொடங்கியது. பிரதமர், மாநில முதல்- மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப்பின் முதல் முறையாக நேரடியாக நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் மாநில முதல்-மந்திரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் பயிர் பல்வகைப்படுத்தல், பருப்பு மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தியில் தற்சார்பு, புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு நிலையான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான உந்துதலில், மத்திய மற்றும் மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தை நோக்கி ஒருங்கிணைக்க இந்த கூட்டம் வழி வகுக்கும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடத்தும் நாடாகவும், தலைவராகவும் இந்தியா இருக்கும் நிலையில், இந்த திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.