ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மைத்துனர் வீட்டில் 5 கிலோ தங்கம், ரூ.21 லட்சம் திருடிய ஆசிரியர்..!!
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாமினி பகுதியை சேர்ந்தவர் ஏடு கொண்டலு. (வயது 45). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது மைத்துனர் அப்பண்ணா. இவரும் அரசு பள்ளியில் கைவினை கலை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஏடு கொண்டலு தனது வருவாய் அனைத்தையும் இழந்தார். மேலும் தனக்கு தெரிந்தவர்களிடம் கடனை வாங்கி ஆன்லைன் விளையாட்டில் இழந்தார். இந்த நிலையில் அப்பண்ணாவின் மகனுக்கு கடந்த ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மணமகள் தனது வீட்டிலிருந்து சீதனமாக கொண்டு வந்த நகை, பணம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அன்பளிப்பாக அளித்த நகை, பணம் அனைத்தையும் அப்பண்ணா வீட்டின் பீரோவில் வைத்து இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி அப்பண்ணா தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 கிலோ தங்க நகைகள், ரூ 21.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பண்ணா கோட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கை கிடப்பில் போட்டனர். கடந்த வாரம் ஸ்ரீகாக்குளம் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா குறை தீர்வு கூட்டம் நடத்தினார். அப்போது அப்பண்ணா ராதிகாவிடம் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பந்தமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தார். இதைடுத்து போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மணமகன் மற்றும் மணமகள், வாடகைதாரர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அப்போது அப்பண்ணா தன்னுடைய வீட்டில் எவ்வளவு நகை, பணம் உள்ளது என தனது மைத்துனர் ஏடு கொண்டலுவுக்கு தெரியும் எனவும் வெளியூர் செல்லும்போது வீட்டு சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு செல்வதாகவும் கூறினார். இதையடுத்து ஏடு கொண்டலு மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தனது விவசாய நிலத்தை ரூ.30 லட்சத்திற்கு விற்று கடன் கொடுத்ததாகவும், மேலும் கடன் இருந்ததால் மைத்துனர் வீட்டில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தார். போலீசார் ஏடு கொண்டலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 9 மாதத்திற்கு பின் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது.