சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று (07) சிரமதானம் செய்யப்பட்டன.!! (படங்கள், வீடியோ)
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் சிரமதான பணியினை பொலிஸாருடன் இணைந்து பொதுமக்கள் முன்னெடுத்தனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் உள்ள குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் துப்பரவு செய்யப்பட்டன.
இச்சிரமதானத்திற்கு பொலிஸ் நிலைய சுற்றுச்சூழலில் உள்ள பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்புக்களை சிரமதான செயற்பாட்டிற்கு வழங்கி இருந்தனர்.இதன்போது வீதியோரங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகளை பொலிஸார் அகற்றி பொதுமக்களின் உதவியுடன் அவ்விடத்தில் இருந்து அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் காலை முதல் மதியம் வரை பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியதுடன் பொதுமக்களிற்கான விசேட விழிப்பூட்டல்களும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நடவடிக்கையானது சாய்ந்தமருது பிரதேச பிரதான சந்திகள் முக்கிய பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி நடவடிக்கையின் போது சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது,குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் ஆலோசனைகள் சாய்ந்தமருது பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
மேற்படி நடவடிக்கையின் போது சாய்ந்தமருது பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பிரிவு, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு ,போக்குவரத்து பிரிவு ,சிறு குற்றத்தடுப்பு பிரிவு ,பெருங் குற்றத்தடுப்பு பிரிவு ,சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவு ,என்பன பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”