100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல்-அம்பாறை நாவிதன்வெளியில் முன்னெடுப்பு!! (படங்கள், வீடியோ)
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 7ஆம் நாள் போராட்டம் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4 ஆம் கிராமத்தில் உள்ள மாவடி சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இன்று (07) ஆரம்பமானது.
பின்னர் ஊர்வலமாக சென்று பல்வேறு கோஷங்களுடன் மக்கள் தத்தமது உணர்வுகளை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி ஒன்று கூடி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்
இதன் போது வடக்கு கிழக்கு மக்களிற்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், நாங்கள் நாட்டை துண்டாடவோ தனி அரசோ கேட்கவில்லை இலங்கை நாட்டிற்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வினை கேட்கின்றோம், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் ,13 ஆவது திருத்த சட்டமானது அரசியல் அமைப்பு ரீதியாக அதிகார பரவலாக்கத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகின்றது ,போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இப் போராட்டத்தில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ,சிவில் அமைப்பினர் , பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர், என 200 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் அடுத்தக்கட்ட போராட்டமானது அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, திருக்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”