சீனா உளவு கப்பல் விவகாரம்: இந்தியாவின் எதிர்ப்பால் அனுமதி ரத்து?
இந்தியாவின் மிக கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சீனாவின் உளவு கப்பலுக்கான அனுமதியை ரத்து செய்யும் கடிதத்தை இலங்கை அனுப்பி உள்ளதென இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு புதிய தலைவலியாக, உளவு கப்பலை அனுப்பி வைக்கிறது சீனா. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வார காலம் இந்த உளவு கப்பல் நங்கூரமிட்டு நிற்கும்.
இந்த உளவு கப்பல் மூலம் தென்னிந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் அனைத்தும் சீனாவால் எளிதாக கண்காணிக்கப்படும். ஆகையால் இந்தியா இதற்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆனாலும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீனா உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உளவு கப்பல் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனக் கப்பல் வருவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.. இந்த விடயத்தை உள்ளக சக்திகளும், வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் எந்த நாட்டையும் பகைக்கவேண்டிய, மோதவேண்டிய நிலைமை கிடையாது. வரலாறு காணாத பொருளாதார அடியால் விழுந்து கிடக்கின்றது இலங்கை. அதிலிருந்து மெல்ல மெல்ல இலங்கை இப்போதுதான் எழுகின்றது என்றார்.
எங்கள் நாட்டின் வெளிவிவகாரம் சம்பந்தமாக நாங்கள்தான் தீர்மானிப்போம். இதில் வெளிச்சக்திகள் தலையிட முடியாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முடிவெடுக்கும் போது அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து முடிவெடுப்பர் என்றார்.
தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இலங்கைக்குள் சீனா உளவு கப்பலை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். கடல்சார் மற்றும் கடலோர வசதிகளை ஆய்வு செய்யக்கூடிய உளவுக் கப்பல் என்பதால், இந்தியாவின் அணுசக்தி மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இது இந்தியாவின் செயல்பாடுகளை உளவு பார்க்க பயன்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபாவில் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனாலும், ஓகஸ்ட் 11ம் திகதி முதல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வார காலம் சீனா உளவு கப்பல் நங்கூரமிட்டு நிற்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சீனா கப்பலுக்கான அனுமதியை ரத்து செய்ய இலங்கை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கின்றது.