பாராளுமன்றம் செயலிழந்து விட்டது- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் விலைவாசி உயர்வு-வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் போராட்டம், கட்சி தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை விசாரணை, பாராளுமன்றம் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்தியாவில் ஜனநாயக நிறுவனங்கள் அடக்கப்பட்டு இருக்கின்றன அல்லது ஏமாற்றப்பட்டு உள்ளன அல்லது கைப்பற்றப்பட்டுள்ளன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களுக்கும் இதுதான் நிலைமை.
நாட்டின் ஜனநாயகம் மூச்சு திணறுகிறது. இதைத்தான் ராகுல் காந்தியும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார். பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதில் இருந்து அவரை பாதுகாக்க அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தவறிவிட்டார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதலால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. அந்த வகையில் பாராளுமன்றம் செயலிழந்து விட்டது என்ற முடிவுக்கு வருத்தத்துடன் வந்திருக்கிறேன்.
இதற்கு ஒரே காரணம் பேச்சுவார்த்தை, விவாதம் மற்றும் ஆலோசனையில் ஆளுங்கட்சியினருக்கு ஆர்வம் இல்லை. விலைவாசி உயர்வு குறித்து முதல்நாளே விவாதம் நடத்த அரசு ஒப்புக்கொண்டிருந்தால், ஒரே நாளில் விவாதம் முடிந்திருக்கும். மாறாக 2 வாரங்களை வீணடித்தோம். விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவைதான் எங்கள் கவலை. இவை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தியுள்ளன. விலைவாசியை குறைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துரைக்க நிதி மந்திரி கடமைப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் செய்யவில்லை.
பணவீக்கம் அதிகரிப்பு பிரச்சினையில் அதிக தனிநபர் வருமானமும், சேமிப்பும் கொண்ட அமெரிக்காவுடன், குறைந்த தனிநபர் வருமானமும், சேமிப்பும் கொண்ட இந்தியாவை நிதி மந்திரி ஒப்பிடுவது கேவலமானது. இவ்வாறு ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட தினத்தில் (ஆகஸ்டு 5) விலைவாசி உயர்வு தொடர்பாக காங்கிரஸ் போராட்டம் நடத்தியிருப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருக்கும் குற்றச்சாட்டை ப.சிதம்பரம் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘துணை ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து எம்.பி.க்களும் டெல்லியில் இருக்கும் நாள் பார்த்து அந்த போராட்டம் திட்டமிடப்பட்டது. மேலும், ஆகஸ்டு 5-ந் தேதி தான் ஜம்மு காஷ்மீர் சட்ட விரோதமாக துண்டாடப்பட்டது. ஒரு தீவிரமான பிரச்சினையை விவாதிக்கும்போது இவற்றை விட்டுவிடுவோம்’ என்று தெரிவித்தார்.