கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்- நிரம்பி வழியும் அணைகள்: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு..!!
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி போன்ற அணைகள் நிரம்பிவிட்டன. அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 1,25,569 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை நிரம்பியுள்ளது. அந்த அணையின் 33 மதகுகள் திறக்கப்பட்டு ஒரு லட்சம் கனஅடி நீர் துங்கபத்ரா ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஹம்பியில் உள்ள வரலாற்று சின்னங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கட்டபிரபா, மல்லப்பிரபா, கிருஷ்ணா, காவிரி, சுபா, வராகி மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. கடலோர பகுதிகளில் உள்ள அணைகளும் நிரம்பி வழிவதாக கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.