கேரளாவில் கனமழை எதிரொலி- 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் மகாராஷ்டிராவின் தெற்கு கடற்கரையிலிருந்து கேரளாவின் வடக்கு கடற்கரை வரை நீண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கிழக்கு மத்திய அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி உருவாகி உள்ளது. இதனால் கேரளாவில் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு, ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய 6 மாவட்டங்கள், வயநாட்டில் தொழில்முறை கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குடியிருப்புப்பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் நடைபெறும். பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக நிவாரண முகாம்களாக பள்ளிகள் மாற்றப்பட்டுள்ளன.