புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியமையை கண்டித்து வடக்கில் போராட்டம்!! (படங்கள்)
புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ வதிவிடம் ஆகியவற்றில் கடந்த 30ஆம் திகதி இரவு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு 65 லீட்டர் எரிபொருளை மீட்டு இருந்தனர்.
அலுவலக மின் பிறப்பாக்கியின் தேவைக்கான 50 லீட்டர் டீசல் , பிரதேச செயலரின் சொந்த பாவனைக்காக சேமித்து வைத்திருந்த 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 5 லீட்டர் மண்ணெண்ணெய் என்வற்றையே பொலிஸார் மீட்டு இருந்தனர் என பிரதேச செயலர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதேச செயலரை வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்குடன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் நடந்து கொண்டதாகவும் , திட்டமிட்டு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தி அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் நடந்து கொண்டதாகவும், அதனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரி நிர்வாக சேவை வடக்கு கிளை சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.
வடக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 09 மணி முதல் 11 மணி வரையில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”