ராஜஸ்தானில் கோவில் விழாவில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி- பிரதமர் மோடி இரங்கல்..!!
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகார் மாவட்டத்தில் புகழ்பெற்ற கட்டு ஷியாம்ஜி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரபலமான புனித தலம் ஆகும். இந்த கோவிலில் வழிபட்டால் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும் இன்று இந்த கோவிலில் கியாரஸ் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரின் அவதாரமாக நம்பப்படும் கட்டு ஷியாம்ஜியை இன்று தரிசனம் செய்தால் சிறப்பானது என்று நம்பப்படுகிறது.
இதையடுத்து இந்த கோவிலில் இன்று அதிகாலையில் தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் கூடி இருந்தனர். கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்றனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் முண்டியடித்த படி கோவிலுக்குள் நுழைந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது இதய நோயால் பாதிக்கப்பட்ட 63 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் விழுந்த போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த 2 பெண்களும் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர்.
இதில் அவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவில் நுழைவு வாயிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மேலும் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் நெரிசல் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கோவில் விழாவில் நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் உள்ள கட்டு ஷியாம்ஜி கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணங்கள் துயரம் அடைந்த குடும்பங்கள் மீது உள்ளன’ என்று கூறி உள்ளார். ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘சிகாரில் கட்டு ஷியாம்ஜி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தது மிகவும் சோகமானது, துரதிருஷ்டவசமானது. அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.