கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!
மழைக்காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக்கோரி வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலாளர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த பணிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கடமை தவறும் அதிகாரிகள் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி வி.பி.ஆர்.மேனன் சென்னை ஐகோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணைக்கு தடைகோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீடு செய்தது. அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அப்துல் நசீர், ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு நீர்வளத்துறை செயலாளர், வருவாய் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தனர். மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க வி.பி.ஆர்.மேனனுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.