;
Athirady Tamil News

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிப்பு..!!

0

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த பணி ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தங்க நெற்றிப்பட்டயம் இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறையினர் ஏற்கனவே தோண்டிய குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன ஜாடியும், அதை சுற்றி ஐந்து இடத்தில் ஜாடியின் மேல் கொக்கு, வாத்து, பறவைகள் நீர் அருந்துவது போலவும், அதன் அருகில் 2 வெண்கலத்தால் ஆன வடிக்கட்டியும் இருந்தது. மேலும், அந்த குழியில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 இரும்பு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் இதுகுறித்து திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் கூறுகையில், ‘ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதில் ஏராளமான தொன்மையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த குழியில் புதைக்கப்பட்டவர் அந்த காலத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்திருப்பார். எனவே தான் இந்த குழியில் மேலும் வெண்கல பொருட்கள், இரும்பு பொருட்கள் இருந்து உள்ளது. இந்த தங்கம் நெற்றிப்பட்டயம் வருகிற காலங்களில் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் ஒரு பொருளாக இருக்கும்’ என்றார். ஆய்வாளர்கள் உற்சாகம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.