;
Athirady Tamil News

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்..!!

0

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த செஸ் வீரர்-வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். எனவே சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அன்றைய தினம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்டிரல் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவை ஏற்படின் மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். அதே போன்று ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்டிரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே பிராட்வேயில் இருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கச்சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.