பீகார் அரசியலில் திருப்பம் – முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்..!!
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. இடையிலான உறவு சமீப காலமாக சீராக இல்லை. பீகார் மாநில பா.ஜ.க. தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ்குமாரை விமர்சித்து வருகிறார்கள். மத்திய மந்திரி சபையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அதிக இடங்களை அளிக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டசபைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிதிஷ்குமார் வைத்திருந்தார். இதில் மத்திய மந்திரி சபையில் அதிக இடம் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை பா.ஜ.க. மறுத்துவிட்டது. இதையடுத்து பா.ஜ.க. தலைமையிலான மந்திரி சபையில் இனி சேரப்போவது இல்லை என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியது. இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஐக்கிய ஜனதா தளம் அரசை ஆதரிக்கத் தயார் என லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், பீகார் முதல் மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பாகு செளகானைச் சந்தித்து வழங்கினார். இதன்மூலம் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.