;
Athirady Tamil News

பா.ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகல்?: எம்.எல்.ஏ.க்கள்-எம்.பி.க்களுடன் அவசர ஆலோசனை..!!

0

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதாவுக்கு 77 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அதிக இடங்களில் வென்றாலும் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆனார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா இடையிலான உறவு சமீபத்தில் சீராக இல்லை. பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ் குமாரை விமர்சித்து வருகிறார்கள். மத்திய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு அதிக இடங்களை அளிக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டசபைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிதிஷ்குமார் வைத்திருந்தார். இதில் மத்திய மந்திரி சபையில் அதிக இடம் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை பா.ஜனதா மறுத்துவிட்டது. இதையடுத்து பா.ஜனதா தலைமையிலான மந்திரி சபையில் இனி சேரப்போவது இல்லை என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்வதாகவும், அதற்காக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆர்.சி.பி. சிங்கை பா.ஜனதா வளைக்க முயற்சிப்பதாகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் சந்தேகித்தனர். இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.யாக இருந்தனர். சி.பி. சிங்கின் பதவிக்காலம் முடிந்தது. ஆனால் அவருக்கு நிதிஷ்குமார் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் அவருக்கு கட்சி சார்பில் நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதனால் ஆர்.சி.பி.சிங் சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அழைத்த 4 கூட்டங்களில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவி ஏற்பு விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் உள்ளிட்ட 4 கூட்டங்களை நிதிஷ்குமார் புறக்கணித்தார். இதனால் அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி செல்வதாக கூறப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் பா.ஜனதா இடையே விரிசல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இரு கட்சியினரும் பாட்னாவில் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி விரிவான ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அடுத்த 48 மணி நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் தீர்வு காண பீகார் துணை முதல் மந்திரி தர்கிஷோர் பிரசாத் தலைமையில் பா.ஜனதா பிரதிநிதிகள் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்துக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் பாட்னாவில் இன்று தொடங்கியது. இதில் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஐக்கிய ஜனதாதளம் அரசை ஆதரிக்க தயார் என்று ஏற்கனவே லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன. எனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி லல்லு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ்குமார் சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. எனவே நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறினால் அவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகலாமா என்றும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் பீகாரில் இன்று பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.