புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற தீவிர முயற்சி- மத்திய அரசு அதிகாரிகள் தகவல்..!!
தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப் பட்டதாகும். 1927-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. தற்போதைய பாராளுமன்றம் அருகிலேயே ரூ.977 கோடி செலவில் புதிய பாராளுமன்றம் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். டாடா நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளது. 13 ஏக்கர் பரப்பளவில் 4 மாடிகளுடன் உருவாகி வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சமயத்தில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற கட்டுமான பணிகளில் தாமதமும், கூடுதல் செலவீனமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. எஞ்சியுள்ள பணிகளுக்காக மிர்சாபூரில் இருந்து கையால் நெய்யப்பட்ட குஷன் கம்பளங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களும் பயன்படுத்தப் படுகின்றன.மகாராஷ்டிராவில் இருந்து தேக்கு மர சாமான்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுவதை உறுதி செய்ய முழு முயற்சி எடுத்து வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடியின் லட்சிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த மாதம், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.