தென்கொரியாவில் 80 ஆண்டுகளில் இல்லாத கனமழை – 9 பேர் பலி..!!
தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன், கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. மணிக்கு 100 மி.மீ என்கிற அளவில் மிக அதிகமான கனமழை பெய்ததாக தென்கொரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்தில் 141.5 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாகவும், இது 1942-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட அதிக மழை பொழிவு என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியது. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே இரவில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் சியோல் மற்றும் இன்சியோன், கியோங்கி மாகாணங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள், மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் கனமழை, வெள்ளத்தால் மின்சாரம் துண்டிக்கப்படடு பல நகரங்கள் இருளில் மூழ்கின. இதனிடையே இந்த கனமழைக்கு 9 பேர் பலியானதாகவும், 6 பேர் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.