சாலை, குடிநீர் வசதி கேட்டு டோலியை சுமந்து, காலி குடத்துடன் பழங்குடியின மக்கள் நூதன போராட்டம்..!!
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜ் மற்றும் பார்வதிபுரம் மானியம் மாவட்டங்களில் உள்ள மலைகளில் ஏராளமான மலை வாழ் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பல மலை கிராமங்களில் பாதுகாப்பான குடிநீர், மலைகளுக்கு சாலை,மின் இணைப்பு இல்லை. சாலை வசதி இல்லாததால், நோய்வாய்ப்பட்ட மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் டோலி கட்டி மலை உச்சியில் இருந்து 5 முதல் 10 கிமீ தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அரசியல் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டும் ஓட்டு கேட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதாக அப்பகுதி பழங்குடியினத்தவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத ஆந்திர மாநில அரசை கண்டித்து குடிநீருக்காக மலையோரங்களை நம்பி வாழும் பழங்குடியினப் பெண்கள், மலையோர ஓடையில் 2 பாத்திரங்களை தலையில் சுமந்தவாறு மண்டியிட்டு நூதனப் போராட்டம் நடத்தினர். இதேபோல் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள பித்ரு கெடா, பெத்தா செருவு மற்றும் பிற பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களும், ஏ.எஸ்.ஆர் மாவட்டத்தில் உள்ள கொய்யூர் மண்டலத்தின் ஜாஜுலா பந்தா கிராமத்தில் பழங்குடியினரும் தங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி கோரி இலை, தழைகளை அணிந்து டோலிகளை ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச பழங்குடியினர் தின கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில் அவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல சிரமம் அடைந்து உள்ளனர். வடக்கு ஆந்திராவில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன, அங்கு சரியான சாலை வசதி இல்லை மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை.4 சக்கர வாகனங்கள் மட்டுமின்றி 2 சக்கர வாகனங்களும் மலைப்பாங்கான வழுக்கும் பாதையில் செல்ல முடியவில்லை. கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நோயாளிகளை மூட்டை போல் சுமந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என பழங்குடியின மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.