;
Athirady Tamil News

தலைவர் பதவியை ஏற்க ராகுல் தொடர்ந்து மறுப்பு- காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி..!!

0

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு சோனியா காந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ராகுல் காந்தியே மீண்டும் கட்சி தலைவராக வரவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் மீண்டும் கட்சி தலைவராவதில் ராகுல் காந்திக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தபோதும், சோனியா காந்தி இடைக்கால தலைவராகும் போதும் ராகுல் காந்தி நானோ அல்லது எங்களது குடும்ப உறுப்பினர்களோ மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆக முடியாது என பகிரங்கமாக கூறி இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பணவீக்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ராகுல் காந்தி கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த மூத்த நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் மீண்டும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்குமாறு வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அடுத்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறுகிறது. சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 150 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரையில் வாரத்தில் 4 அல்லது 5 நாட்களுக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதற்கு ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் கட்சி தலைவர் தேர்தல் தள்ளிப்போகலாம் எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- ராகுல் காந்தி மனதில் இருப்பதை அவரால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். கட்சி தலைவர் தேர்தலை பொறுத்தவரை தலைமை அட்டவணையின்படி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம். ஒருவேளை தலைவர் தேர்தல் சிறிது காலம் தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது என்றார். கட்சியின் முடிவுகளில் பங்கு வகிக்கும் ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்பதை விட வழிகாட்டியாக இருப்பதையே விரும்புவதாக மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் அடுத்த காங்கிரஸ் தலைவராக யார் வர முடியும் என்ற முணுமுணுப்பு காங்கிரஸ் தலைவர்களிடம் அதிகரித்து வருகிறது. சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி அல்லது பிரியங்கா ஆகிய 3 பேரில் யாரேனும் ஒருவராவது கட்சி தலைமை பொறுப்பை ஏற்குமாறு முறையிடவும், கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் இதனை முன்மொழியவும் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.