;
Athirady Tamil News

பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார்..!!

0

பீகார் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதா இடையே கூட்டணி முடிவுக்கு வந்ததால் முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பாட்னாவில் நடந்த ஐக்கிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து நிதிஷ் குமார் தனது பதவியை துறந்து விட்டு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர் நேராக கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகு சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரி தேவியின் வீட்டுக்கு சென்று லல்லு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ்வை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவுடன் புதிய மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு அந்த கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பின்னர் நிதிஷ் குமார் வீட்டில் நடந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தேஜஸ்வி யாதவுடன் மீண்டும் கவர்னர் பகு சவுகானை சந்தித்து எதிர்க்கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி அதற்கான கடிதத்தை நிதிஷ்குமார் கவர்னரிடம் அளித்தார். இதை தொடர்ந்து பீகாரில் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 8-வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் இன்று மீண்டும் பதவியேற்றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். நிதிஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ஆதரவோடு பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.